திங்கள், 21 டிசம்பர், 2009

ஆஸ்கார் அவார்டை தட்டிச்செல்லும் வேட்டைக்காரன்!

ஆஸ்கார் அவார்டை தட்டிச்செல்லும் வேட்டைக்காரன்!
உலகத்தரமான படங்களை மட்டுமே தயாரித்துக்கொண்டிருக்கும் சன் தொ(ல்)லைக்காட்சி, குணச்சித்திரமான வேடங்களில் மட்டுமே நடிக்கும் உலக நாயகன் (மன்னிக்கவும்: அதற்குதான் கமல் இருக்கிறாரே!) மன்னிக்கவும் அண்டசராசரங்களின் நாயகன் விஜய் இவர்களின் கூட்டுமுயற்சியில் உருவான ஆஸ்கார் அவார்டு வாங்கவேண்டும் என்ற ஒரே முயற்சியில் தயாரிக்கப்பட்ட வேட்டைக்காரன் திரையரங்குகளை கலக்கிவருகிறான்....இது சூரிய தொ(ல்)லைக்காட்சியின் அதிரடியான ஒரு புருடா!

இதற்கு சிகரம் வைத்த மாதிரி சூரிய தொ(ல்)லைக்காட்சியின் இன்றைய (21-12-2009 7:00 இரவு) முக்கிய செய்தியில் நாம் கேட்டறிந்தவை...
"வேட்டைக்காரன் கதாநாயகன் விஜய்யும், அவரது தந்தையும் சன் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் கலாநிதிமாறனை அவரது இல்லத்தில் சந்திதித்து, வெற்றிநாயகனாக்கியதற்கு நன்றி சொன்னார்கள்".
சன் தொலைக்காட்சியில் விஜய்யின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். அப்பொழுது அவரது தலைமுடி குழம்பியிருந்ததது. (ஒரு டப்பாபடத்தை எப்படி வெற்றிபடமாக்கினார்கள் என்பதே விஜய்யின் குழப்பத்திற்கு காரணமோ?. வேட்டைக்காரன் எப்பொழுது வெற்றிப்படம் ஆனது என்பதுதான் எங்களின் குழப்பம்.)

முதலில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான் செய்தியை முந்தி தந்ததற்காக உலகத்தமிழர் சார்பாக கலாநிதிமாறனுக்கு எம் நன்றி.
இரண்டாவதாக, இன்றைய உலகத்திற்கு மிகவும் தேவையான முக்கியமான கருத்துக்களை மையமாகக்கொண்ட வேட்டைக்காரன் போன்ற திரைப்படத்தை தயாரித்ததற்காகவும் உலத்தமிழர் சார்பாக மறுபடியும் தலைவணங்கி நன்றி சொல்லுகிறோம். உங்கள் பணி தொடரவேண்டும் என வாழ்த்துகிறோம்.

விஜய்யால் மட்டுமே நடிக்கமுடியும் என்பதை மறுபடியும் விஜய் நிரூபித்துவிட்டார். சூர்யா, விக்ரம், கமல் வேறுயாராலும் முடியாது. (எப்படி அய்யா முடியும்? விஜய்தானே அய்யா, இந்த படத்தில் நடிப்பதற்காக முழுத்தொகையும் வாங்கியிருக்கார். பிறகு எப்படி மற்றவர்களால் நடிக்க முடியும்????)

இன்னும் நிறைய சந்தேகங்கள்!!!

ஆஸ்கார் அவார்டு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!!!

டொமினிக் சவுதி

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

வேட்டைக்காரானும் வேலைவெட்டியில்லாத ரசிகர்களும்!!


நடிப்பு: விஜய்,அனுஷ்கா, சலீம் கவுஸ், ஸ்ரீஹரி, ஷாயாஜி ஷிண்டே
ஒளிப்பதிவு: கோபிநாத்
இசை: விஜய் ஆண்டனி
இயக்கம்: பாபு சிவன்
தயாரிப்பு: ஏவிஎம்

அதோவாரான், இதோவாரான்னு பூச்சிகாட்டிய வேட்டைக்காரன்.....
....அப்பாடா! ஒருவழியாக வந்துவிட்டான்.
சன் தொ(ல்)லைக்காட்சி குழுமத்தில் வேலை பார்ப்பவர்களும், வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சகம் இல்லாமல் வேட்டைக்காரனுக்கு வாய்கிழிய விளம்பரம் செய்து சமுதாயத்தொண்டாற்றிவிட்டார்கள். அதன் உச்சககட்டமாக சன் தொ(ல்)லைக்காட்சிகளின் முக்கியசெய்திகளில் ஒன்றாக வேட்டைக்காரன் அலசப்பட்டான். காஞ்சி காமக்குரு தேவநாதனின் செய்திகள்ளுக்குப்பிறகு, பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்தது வேட்டைக்காரனுக்குதான் என்றால் மிகையாகாது.

சோகம் என்னவென்றால் ஒருபாட்டு கூட கேட்கும்படியாக இல்லை!!


இந்த பிரமாண்டமான திரைப்படத்தைப்பற்றிய தாட்ஸ்டமில்.காம் விமர்சனம் இதோ!

மாஸ் மசாலா என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர முடியாத அல்லது விருப்பமில்லாத விஜய்யின் மற்றுமொரு வழக்கமான மசாலா வேட்டை இந்த வேட்டைக்காரன்.

கதைப்படி ரவி என்கிற போலீஸ் ரவி (விஜய்) ஒரு தூத்துக்குடி பையன். ப்ளஸ்டூவை நான்காவது அட்டம்டில் தாண்டும் சராசரி மாணவரான அவருக்கு, பெரிய லட்சியம் ஒன்று உண்டு. அது தனது ஆதர்ஸ நாயகனான தேவராஜ் ஐபிஎஸ் (ஸ்ரீஹரி) மாதிரி பெரிய போலீஸ் ஆ...பீஸர் ஆவது.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் சென்னையில் கல்லூரியில் சேர்ந்து படிக்க ரயிலேறுகிறார். அப்போதுதான் அனுஷ்காவைச் சந்திக்கிறார்.

வழக்கம்போல அந்தக் கணத்திலேயே விஜய்யின் கனவு நாயகியாகி விடும் அனுஷ்கா, வழக்கம் போல டூயட்டெல்லாம் பாடி ஓய்கிறார்.

அப்போதுதான், செல்லா என்ற மோசமான வில்லனைச் சந்திக்கிறார் விஜய். அழகான பெண்ணைப் பார்த்த கணத்தில் படுக்கைக்குத் தூக்கிச் செல்லும் சைக்கோ கேரக்டர் இந்த செல்லா. தன் வகுப்புத் தோழி ஒருத்திக்கு இந்த சோகம் நிகழ, நாயகன் விஜய் பொங்கியெழுந்து போட்டுப் புரட்டியெடுத்து கொன்று விடுகிறார் செல்லாவை.

இந்த செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீம் கவுஸ்) பெரிய டான். மகனைக் கொன்ற விஜய்யை போட்டுத் தள்ள போலீஸ் அதிகாரி சாயாஜி ஷிண்டேக்கு அஸைன்மெண்ட் தருகிறார். ஆனால் அதை உதாசீனப்படுத்தும் சாயாஜி, 'நீயென்ன பெரிய மந்திரியா, எனக்கு உத்தரவு போட' என திருப்பிக் கேட்க, அப்போதே மகன் கொலையை மறந்து, மந்திரியாகும் வெறியில் அரசியல் காய் நகர்த்துகிறார் வேதநாயகம்.

ஒரு கட்டத்தில் விஜய்யின் ஆதர்ச நாயகனான தேவராஜ் ஐபிஎஸ், இந்த வேதநாயகத்தால் பாதிக்கப்பட்டு கண் பார்வை போய், வேலையையும் இழக்கிறார்.

விஜய்யின் கோபம் இப்போது இன்னும் பல மடங்கு பெருக, வில்லனை வேட்டையாட புறப்படுகிறார்... (ஹை... டைட்டிலுக்கு காரணம் கண்டுபிடிச்சிட்டோம்)வேதநாயகத்தை அழிக்கிறார்...

இதிலென்ன புதுசா இருக்கு என்கிறீர்களா... இந்தக் கேள்வி விஜய் அண்ட் கோவுக்கு போக வேண்டியது. எனவே படத்தில் கலைஞர்களின் பங்களிப்பைப் பார்க்கலாம்.

கஷ்டப்பட்டு நடிக்க விஜய்க்கு இதில் ஒன்றுமில்லை. காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். சத்தியமாக சிரிப்பு வரவில்லை. அதுக்குதான் வடிவேலு, சந்தானம் போல நிறை இருக்கிறார்களே... இவருக்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை.

கவுண்டரை காப்பியடித்தார் சந்தானம். இப்போது சந்தானத்தை காப்பியடிக்கிறார் இந்தப் படத்தில் விஜய்யுடன் ஒட்டிக் கொண்டே வரும் ஸ்ரீநாத். சகிக்கலை!

படத்தில் அட பரவாயில்லையே என்று சொல்ல வைப்பவர் ஸ்ரீஹரி என்ற தெலுங்கு பார்ட்டி. இவர்தான் தேவராஜ் எனும் நல்ல போலீசாக வருகிறார். ஆனால் கொடுமை என்னவெனில், இதே கேரக்டரை நாம் தரணியின் தில் படத்தில் பார்த்து விட்டோம் (இயக்குநர் தரணியின் உதவியாளர்தான் வேட்டைக்காரன் இயக்குநர் பாபு சிவன்!).

அனுஷ்கா அம்சமாக இருக்கிறார். அவரிடமிருந்து நமது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது நிச்சயம் நடிப்பை அல்ல என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, தனது அழகால் அசரடித்து விட்டுப் போகிறார்.

முதல் பாதியில் காட்சிகள் பழசாக இருந்தாலும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது. இரண்டாம் பாதியில் ரொம்ப்பக் கஷ்டம்!

கோபிநாத்தின் ஒளிப்பதிவில் பெரிய சாகஸங்கள் எதுவும் இல்லை.

விஜய் ஆண்டனி... பாடல்களைக் கேட்ட பிறகு, அவரிடம் 'ஏன் இந்த கொல வெறி' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அப்படி ஒரு அதிவேகம்.

நல்ல ஸ்கிரிப்ட் என்றால், ஏற்கெனவே ஹிட்டான படங்களின் சீன்களை உருவி புதுசாக உருவாக்குவதுதான் என யாரோ தவறாக சொல்லிவைத்திருக்கிறார்கள் போல, இயக்குநர் பாபு சிவனிடம்.

படத்தில் விஜய் ஆண்டனியின் பாடலில் நிக்காம ஓடு ஓடு ஓடு என்று ஒரு வரி அடிக்கடி வருகிறது. அனேகமாக படத்தைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் இந்த வரியை தங்கள் நண்பர்களிடம் சொல்லக் கூடும்!!

நன்றி: தாட்ஸ்டமில்.காம்

எனது வேண்டுகோள் என்னவென்றால் ....விஜய் நோபல் பரிசு வாங்கிய விஞ்ஞானியும் அல்ல. தில் தில் மனதில் இடம்பிடித்து சாகசங்களைச்செய்யவல்ல அசாதாரணமானவரும் அல்ல. ஸ்டண்ட் மாஸ்டர்களின் தியாகத்தாலும், கிராபிக்ஸின் கருணையாலும் படங்களில் வந்து செல்கிறார். அதனால் நேரத்தையும் காசையும் விரையம் செய்து முதல் வரிசையில் நின்று விஜய் படத்தைப்பார்க்கவேண்டும் என்ற தலையெழுத்து நமக்கு தேவையில்லாதது.

dompower