சனி, 5 மார்ச், 2011

தேராத தேர்தல் பார்ட்டிகள்!

அதோ இதோ என்று சொல்லிக்கொண்டிருந்த தேர்தலுக்கான நாள் குறித்தாகிவிட்டது. இதற்காகவே ஏங்கிக்கொண்டிருந்த கட்சிகளும் கடைவிரிக்க ஆரம்பித்துவிட்டன. பரிதாபத்திற்குறிய கட்சிகள் கூட பள பள என மினுக்கித்திரிவது தேர்தல் முடிவுகள் தெரியும் வரை மட்டுமே. திருவிழாக்கடைகள் போல இந்த தேர்தல் முடிந்ததும், காணாமல் போகும் கட்சிகள் எத்தனையோ நாம் பார்க்கத்தான் போகிறோம். பால் கட்டியை கருங்குரங்கு பங்கு போட்ட கதையாக, கட்சிகள் பங்குபேரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் தேர்தலின் கதாநாயகனான பொதுமக்களை யாரும் இன்னும் கண்டுகொள்ளவில்லை.

இந்த தேர்தலில் எந்த கட்சிக்கு ஓட்டுபோடுவது?

இப்பொழுது இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி? .........

லஞ்சமே வாங்காத கட்சிக்கு ஓட்டு போடணும் என்று நீங்கள் நினைத்தால், ஓட்டு போடும் எண்ணத்தையே ஓரங்கட்டிவிட்டு உங்களுக்கு விருப்பமான தேர்தல் தினத்தில் வீட்டில் அடங்கி....சேனலோடு ஐக்கியமாவதுதான் சாலச்சிறந்தது.

என்னைப்பொருத்தவரை லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிதான் ஒரு சிறந்த அரசியல்வாதி என்று சொல்லுவேன். லஞ்சம் வாங்கத்தெரிந்த அரசியல்வாதிதான் புத்திசாலியாக இருப்பான். பிழைக்கத்தெரிந்தவனாக இருப்பான். அப்படிப்பட்ட அரசியல்வாதிகாளால் தான், நம்மை நெருக்கடி காலங்களில் காக்க முடியும். மன்மோகன் சிங் போன்ற அரசியல்வாதிகளால் நம் நாட்டுக்கு தான் என்ன லாபம்.? நாட்டுக்கு மட்டுமன்று அவர் வீட்டிற்குதான் என்ன லாபம்?

காமரஜர் என்று ஒரு பிழைக்கத்தெரியாத அரசியல்வாதி இருந்தார். நகராட்சியிலிருந்து தன்வீட்டிற்கு கொடுக்கப்பட்ட குடிநீர் வசதியைக்கூட வேண்டாமெனெ வெட்டி விட்ட அப்பாவி.... அவருக்கு பிழைக்க தெரியாதுதான் ஆனால் அவர் பெயரை வைத்து அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள் பிழைக்கத்தெரிந்தவர்களே! ஆனால் காமராஜர் பெயரைச்சொல்லாமல் காங்கிரஸ் காரர்களால் இப்பொழுது அரசியல் நடத்த முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக